இசை ஞானி இளையராஜா அவர்களை மிஞ்ச முடியாது!

இசை ஞானி இளையராஜா அவர்களை மிஞ்ச முடியாது!

ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இசை ஞானி இளையராஜா அவர்களை மிஞ்ச முடியாது – ராணி இசை வெளியீட்டு விழாவில்  இயக்குநர் பேரரசு பரபரப்பு பேச்சு:

 

ராணி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா  நடைபெற்றது இதில் இசைஞானி இளையராஜா அவர்கள் , சாய் தன்ஷிகா , இயக்குநர் பாணி , தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன் , இயக்குநர் சமுத்திரகனி , நடிகர் நமோ நாராயணன் , இயக்குநர் கரு,பழனியப்பன் , இயக்குநர் பேரரசு , நடிகர் மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராணி பாடல் வெளியீட்டு விழாவில் தன்ஷிகா பேசியது :-

ராணி திரைப்படத்தில் இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் நடிப்பது பெருமையாக உள்ளது. நான் இப்படத்தில் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குநர் சமுத்திரகனி அவர்கள் தான்.அவர் கூறியதால் தான் நான் இப்படத்தில் நடித்தேன். என்னை அறிமுகபடுத்திய இயக்குநர் ஜனநாதன் முதல் கபாலி இயக்குநர் ரஞ்சித் மற்றும் ராணி திரைப்படத்தின் இயக்குநர் பாணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார் தன்ஷிகா.

 

விழாவில் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசியது :-

இப்படத்தின் இயக்குநர் பாணி , இயக்குநர் சமுத்திரகனி அவர்களின் உதவி இயக்குநர். இயக்குநர் சமுத்திரகனி அவர்களின் உதவி இயக்குநர் , இயக்குநர் சசி குமார் அவர்களின் உதவி இயக்குநர் எல்லாம் ஒன்று தான் வெவ்வேறு இல்லை. இப்படத்தின் கதை எனக்கு நன்றாக தெரியும் , இக்கதை மிகச்சிறந்த கதையாகும். இசைஞானி இளையராஜா அவர்களின் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் பாணி அவர்கள் தேனீ போல் உழைத்து இப்படத்தை சிறப்பாக உருவாகியுள்ளார். கபாலி படத்துக்கு பின்னர் எல்லோருடைய கவனமும் தன்ஷிகா மீது தான். ராணி படத்துக்கு பின்னர் தன்ஷிகா மேலும் மிகப்பெரிய இடத்துக்கு செல்வார் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.

 

விழாவில் இயக்குநர் கரு. பழனியப்பன் பேசியது :-

நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும் அதனால் தான். இப்போது முதன் முறையாக இசை ஞானி இளையராஜா அவர்களிடம் கோரிக்கை வைக்க போகிறேன். அவர் யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் அவர் இசையமைத்த படங்களையே நாம் இன்று வரை கேட்கிறோம் அப்படி இருக்கும் போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும் போது அதை பல ஆண்டுகள் தானி அனைவரும் ரசிப்பார்கள் என்பது உறுதி. எனக்கு கார்த்திக் ராஜா அவர்களிடமும் , யுவன் ஷங்கர் ராஜாவிடம் ஒரு கோரிக்கை உண்டு ஒன்று இசைஞானி இளையராஜா அவர்கள் இது வரை இசையமைத்த படங்களின் லிஸ்டை உருவாக்க வேண்டும் மற்றொன்று ஒட்டு மொத்த திரையரங்கத்தையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது தான். இசைஞானிக்கு பாராட்டு விழா ஏனென்றால் ஒட்டு மொத்த ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக அதை கொண்டாடி ரசிப்பார்கள். 40 வருடங்களாக சாதனை புரிந்து வரும் அவரை நிச்சயம் கொண்டாட வேண்டும். கண்டிப்பாக அவர் இதற்கும் மறுப்பு தெரிவிப்பார் நான் யுவனிடம் பேசிகொள்கிறேன் என்றார் இயக்குநர் கரு,பழனியப்பன்.

 

விழாவில் இயக்குநர் பேரரசு பேசியது :-

நான் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான் பொறாமை பட்டுள்ளேன் ஒன்று என்னுடைய முன்னாள் காதலியின் கணவன் மற்றொன்று இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள். அந்த விதத்தில் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு. நான் இசைஞானி இளையராஜா அவர்களை கவரும் வகையில் கதையை தயார் செய்து நிச்சயம் அவருடைய இசையில் ஒரு படத்தை இயக்குவேன். நாம் எல்லோரும் பயணத்தில் கேட்கும் பாடல்கள் அனைத்தும் இசை ஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தான். அவருடைய பாடல்களை கேட்டால் 2,000 கிலோ மீட்டர் தாண்டி கூட பயணிக்கலாம்.இயக்குநர் பாணியின் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்படத்தில் எனக்கு அனைத்து பாடல்களும் மனதை கவரும் வகையில் உள்ளது. இப்படி பட்ட சிறந்த பாடல்களை இசைஞானி இளையராஜா அவர்களால் தான் உருவாக்க முடியும். எனக்கு இசைஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை அவர் இதை போல பாடல்களை தான் உருவாக்க வேண்டும் என்பது தான் அது. கரு. பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம். என்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான். “ ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இசை ஞானி இளையராஜாவை “ மிஞ்ச முடியாது என்பது தான் உண்மை.