Billroth Hospitals Adhitri – My Girl My Pride Panel Discussion

Billroth Hospitals  Adhitri – My Girl My Pride Panel Discussion

billroth-hospitals-adhitri-my-girl-my-pride-panel-discussion-1

பில்ராத் மருத்துவமனைகள் அதித்ரி குழு விவாதம்

ஆகஸ்ட் 14, 2018, சென்னை: சென்னையின் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல் மையத்தை தொடங்கியுள்ளது. ஜூன் 27, 2018-ல் தொடங்கப்பட்ட இந்த கருத்தரித்தல் மையம் குழந்தைப்பேறில் சிக்கல் உள்ள தம்பதிகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது. அதித்ரியின் விரிவான மருத்துவ சிகிச்சை “ அட்வான்ஸ்டு அசிஸ்டட் ரீபுரொடக்டிவ் ட்ரீட்மென்ட்டை” சென்னையில் வழங்கவிருக்கிறது.

இதை முன்னிட்டு மை கேர்ள் மை பிரைடு (My Girl My Pride) என்ற பெயரில் பில்ராத் மருத்துவமனை – அதித்ரியின் சார்பாக குழு விவாத நிகழ்ச்சி ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராடிஸன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த குழு விவாதமானது, பெண் குழந்தைகள் இந்த உலகில் சந்திக்கும் சவால்கள் பற்றியும் அவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் பற்றியும் விவாதித்தது மட்டுமின்றி, அந்த இலக்கை நோக்கி  முன்னேற  அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பற்றியும் ஆலோசித்தது. மை கேர்ள் மை பிரைடு  குழு விவாதத்தில் கலந்து கொண்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஏற்றமிகு சிந்தனைகளின் மூலம் இந்த விவாதத்திற்கு வலிமை சேர்த்தனர். அதன் மூலம் இனி வரும் தலைமுறைக்கு, மாற்றத்திற்கான விதையையும் அவர்கள் விதைத்தனர். பெண்களுக்கான பாதுகாப்பு, பொருளாதார ஏற்றதாழ்வு, எண்ணற்ற பணிச்சுமைகளை அவர்கள் கையாளும் விதம், அவர்களுக்குள்ள பொருளாதார அனுகூலங்கள் ஆகியவற்றை பற்றியும் இந்த விவாதத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், டாக்டர். கல்பனா ராஜேஷ், சிஇஓ, பில்ராத் ஹாஸ்பிடல்ஸ் லிட்., பேசியதாவது,பெண்களின் முன்னேற்றத்திற்கும் சமவுரிமைக்கும் நாங்கள் எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இன்னும் எத்தனை வருடங்களுக்கு பெண்களின் முன்னேற்றத்தைப்பற்றி நாம் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கப்போகிறோம்? அவர்கள் முன்னேற்றத்துக்குத் தேவைப்படும் மாற்றங்கள் அனைத்தையும் இப்போதிலிருந்தே செய்ய வேண்டும். நாம் இந்த தலைமுறையிலேயே பெண் குழந்தைகளுக்கு எதிரான சமூகத்தின் அவலங்களை நிறுத்த வேண்டும்” என்றார்.

அதித்ரி – குழந்தையின்மைக்கான பல்வேறு காரணிகளுக்கான ஒரே தீர்வாக இருக்கும். பில்ராத் மருத்துவமனை இப்போது மருத்துவத்துறையில் உள்ள மிக சமீபத்திய தொழில்நுட்பங்களையும் அதற்குத் தேவையான வல்லுனர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வல்லுனர்களும் தொழில்நுட்பமும் இந்த மக்களுக்குத் தேவையான மகப்பேறு பிரச்சனை சம்பந்தமான அனைத்து விதமான தீர்வுகளையும் குறைந்த விலையிலேயே கொடுக்க முடியும்.

பில்ராத் மருத்துவமனைகள் பற்றி:

பில்ராத் மருத்துவமனை, அமரர்.டாக்டர். V. ஜெகன்னாதன் அவர்களால்,30 நவம்பர், 1990-ல் தொடங்கப்பட்டது.அவர், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மீதான கரிசனம், வெளிப்படையான அணுகுமுறை, தொழில் நெறிமுறை மற்றும் உலகத்தரம் வாய்ந்த நவீன மருத்துவத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் மருத்துவத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். இதனாலேயே தென்னிந்தியாவின் மிகமுக்கிய மருத்துவமனையாக பில்ராத் விளங்குகிறது. பில்ராத் மருத்துவமனை குழுமத்தின் தலைவராக இருந்ததோடு, நாட்டின் முன்னனி இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவராகவும், லேசர் மற்றும் லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணராகவும் அவர் விளங்கினார்.
2007-ம் ஆண்டு, டாக்டர்.V. ஜெகன்னாதன் அவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக, அவரது மகன் டாக்டர்.ராஜேஷ் ஜெகன்னாதன், பில்ராத் மருத்துவமனையை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தினார். புற்றுநோயியல், இருதயநோய் மருத்துவம், நரம்பியல், தீவிர சிகிச்சைப்பிரிவு , எலும்பியல் மற்றும் எலும்பு மாற்று சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை ஆகியவற்றை அறிமுகப்படுத்தி நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு தரமான சிகிச்சை அளிக்கும் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியுள்ளார்.

billroth-hospitals-adhitri-my-girl-my-pride-panel-discussion-1 

 பவானி தேவி – வாள்வீச்சு சாம்பியன்: ஃபென்சிங் எனப்படும் வாள் வீச்சு விளையாட்டில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட போட்டி ஒன்றில் தங்கம் வென்ற ஒரே இந்தியர் இவர். தனது 11-வது வயதில் ஃபென்சிங் பயிற்சியைத் தொடங்கிய இவர், இண்டர்நேஷனல் ஃபென்சிங் ஃபெடரேஷனின் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 36-வது இடத்தில் உள்ளார். 2009-ம் ஆண்டு, மலேசியாவில் நடந்த ஜூனியர் காமன்வெல்த் போட்டிகள், சர்வதேச தாய்லாந்து ஓப்பன், 2012-ல் ஜெர்ஸி(UK)-ல் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார், 2014-ல் இத்தாலியில் நடந்த டுஸ்கானி கோப்பையில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப் U-23 பிரிவில் வெள்ளி வென்றுள்ளார். 2015-ல் நடந்த தேசிய விளயாட்டுப் போட்டியில் ஜூனியர் சீனியர் ஆகிய இருபிரிவுகளிலும் வென்றுள்ளார். இந்த சாதனைகளுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல், 2017-ல் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சாட்டிலைட் உலகக்கோப்பையில் தங்கம் வென்றார். தற்போது இவர், சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில், எம்பிஏ படித்து வருகிறார்.

அறிவழகன் வெங்கடாசலம்: திரைப்பட இயக்குனர் அறிவழகன், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சிறிது காலம் பணியாற்றிய பின்னர், ஈரம், வல்லினம் மற்றும் குற்றம் 23 ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஸ்ரீப்ரியா, திரைப்பட நடிகை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீப்ரியா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

 டாக்டர்.V.ரஞ்சினி, எம்.பி.பி.எஸ். டிஜிஓ – குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர் மற்றும் மகளிர் நல மருத்துவர் ஆவார். இத்துறையில் 23 வருட அனுபவமிக்கவர். குழந்தைப்பேறு இல்லாத எத்தனையோ தம்பதிகள் இவரது சீரிய மருத்துவ சிகிச்சையின் மூலம், தாய் தந்தையர் ஆகியிருக்கின்றனர்

கீர்த்தி ஜெயகுமார் – செயற்பாட்டாளர், ஓவியர், சமூக தொழில்முனைவோர் மற்றும் எழுத்தாளர்: பாலின சமவுரிமைக்கான ரெட் எலிஃபன்ட் ஃபவுண்டேஷனின் நிறுவனர். பென்ணிய ஈ-பப்ளிஷிங் நிறுவனமான ஃபைன்பிரிண்ட்டும் (fynePRINT) இவரால் தொடங்கப்பட்டதே. பாலின சமவுரிமைக்கான இளைஞர் பாசறையான UNIANYD-ல் இவர் உறுப்பினராக உள்ளார். இதுவரை இரண்டு நாவல்களை எழுதியுள்ள இவர், பாலின வேறுபாட்டினால் வன்முறைக்குள்ளானோருக்கு உதவும் வகையில் “Sahas” என்னும் செயலியை உருவாக்கியுள்ளார். மிஷெல் ஒபாமா வெள்ளை மாளிகையில் நடத்திய யுனைடட் ஸ்டேட் ஆஃப் வுமன் சம்மிட்டுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டார். பராக் ஒபாமாவின் டவுன் ஹால், டெட் எக்ஸ் சென்னை, சென்னை எகனாமிக் டைம்ஸ் வுமன் சம்மிட் -2018, யுஎன்வி பார்ட்னர்ஷிப் ஃபோரம் ஆகிய நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளார். 2012-ல் யுஎஸ் பிரெசிடென்ஷியல் சர்வீசஸ் பதக்கம் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

C.K.குமரவேல் – தொழில்முனைவோர்: இவர், க்ரூம் இந்தியா சலூன் அண்டு ஸ்பா பிரைவேட் லிமிட்டெடின் இணை நிறுவனர் ஆவார். இந்நிறுவனத்தின் குடையின் கீழ்தான் இந்தியாவின் நம்பர் 1 சலூனான நேச்சுரல்ஸ் இருக்கிறது. 2000-மாவது ஆண்டில், இவரது மனைவி திருமதி.K.வீணா அவர்கள் முதல் நேச்சுரல்ஸ் சலூனை தொடங்கினார். சலூன் தொழில் நடைமுறையில் நாடு முழுவதும் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய நேச்சுரல்ஸ் இப்போது இந்தியா முழுவதிலும் 600-க்கும் மேற்பட்ட கிளைகளைத் தொடங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. பெண்கள் முன்னேற்றத்தில் அளப்பரிய நம்பிக்கை கொண்ட திரு.குமரவேல் அவர்கள், பெண்கள் பணரீதியாக யாரையும் சாராத வாழ்க்கையை வாழ ஊக்குவித்து வருகிறார். ஆங்கில அகராதியிலிருந்து “ஹவுஸ் ஒயிஃப்” எனும் வார்த்தையை நீக்கும் அளவுக்கு, பெண்கள் வாழ்வில் மாற்றம் வரவேண்டுமென்பதே இவரது கனவாகும்